கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 62 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளச்சாராய மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கலப்படம் மதுபானம் விற்கப்பட்டது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாதாரண உடையில் காவல்துறையினர் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கலப்பட மதுபானம் விற்று வந்த 5 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கலப்பட மது பாட்டில்கள், செல்போன், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.