"வெளிநாட்டு மரங்களால் எந்த பயனும் இல்லை. பூக்காது, காய்க்காது. எல்லாம் மரபணு மாற்றப்பட்ட மரங்கள். ஆனால் இதுவரை மரபணு மாற்றப்படாதா, மாற்ற முடியாத ஒரே மரம் பனைமரங்கள் மட்டும் தான்" என்று கடந்த வாரம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சட்டமன்றத்தில் பேசினார். இன்று அவரே ஒரு கிராமத்தினரைப் பெருமையாகப் பாராட்டியுள்ளார். அது எந்த கிராமம்? எதற்காகப் பாராட்டு என்பதைப் பார்ப்போம்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றியுள்ள பல கிராமங்களில் திருவள்ளுவர் மன்றம், நேதாஜி மன்றம் எனப் பல தேசிய தலைவர்களின் பெயர்களில் நற்பணி மன்றங்கள் உருவாகி சுதந்திர கால பரப்புரைக்காகப் பயன்படுத்தியதோடு சுதந்திரத்திற்குப் பின்னர் கிராம வளர்ச்சிக்காக மன்றங்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இன்று ஒவ்வொரு கிராமத்திலும் சினிமா நடிகர்கள் பெயரில் இளைஞர்கள் மன்றங்கள் வைத்து நலப்பணிகள் செய்வது போலத் தான் 30 ஆண்டுகளுக்கு முன்பும் நற்பணி மன்றங்கள் வைத்திருந்தனர்.
அப்படித்தான் 1984 ம் ஆண்டு கீரமங்கலம் அருகில் உள்ள பாண்டிக்குடி என்னும் கிராமத்தில் கிராம வளர்ச்சிக்காக உருவானது தான் மகாகவி பாரதியார் நற்பணி மன்றம். இந்த மன்றத்தின் செயல்பாடு வழக்கம் போல விளையாட்டுப் போட்டிகள் மட்டும் நடத்திவிட்டு ஓய்ந்துவிடவில்லை. மாறாக அடுத்து வரும் சந்ததிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணியாகச் செய்துள்ளது. அதாவது அதே ஊரில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ள பாண்டிக்குளம் என்னும் ஏரியில் முள் செடிகள் மண்டி கிடப்பதைப் பார்த்த அப்போதைய இளைஞர்கள் அதாவது மகாகவி பாரதி நற்பணி மன்றத்தினர், ஏரி முழுவதும் பனை விதைகளை நட திட்டமிட்டனர். அருகில் உள்ள பனங்குளம் வில்லுனி ஆற்றங்கரையில் உள்ள பனைமரத் தோப்பில் விழும் பனம்பழங்களை சேகரித்து பாட்டிக்குளம் ஏரியில் புதைக்கத் தொடங்கினார்கள். அந்த விதை ஒரு வருடம் கடந்து சில விதைகள் முளைத்தது. நிறைய விதை முளைக்கவில்லை என்று பலரும் ஒதுங்கிக் கொள்ள திருப்பதி உள்ளிட்ட ஆர்வமுள்ள பலர் வழக்கமாக விதை சேகரித்து புதைத்தனர். விதை சேகரிக்கவும், விதை புதைக்கவும் சிறுவர்களுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து அழைத்துச் சென்றிருக்கிறார் திருப்பதி.
இப்படியே கடந்த 37 வருடங்களாக நடப்பட்ட பல லட்சம் பனை விதைகளில் இன்று சாரி சாரியாக பல ஆயிரம் பனைமரங்களாக உயர்ந்து நின்று பாண்டிக்குளம் ஏரி இன்று பனைமரக்காடாய் காட்சியளிக்கிறது. இதைப் பார்த்து தான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அடுத்து வரும் சந்ததிக்காக 37 ஆண்டுகளாக எனது ஆலங்குடி தொகுதியில் பாண்டிக்குடியில் பனை வளர்த்து பெருமை சேர்த்த கிராம மக்களை மனதார பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
பனைமரங்கள் வளர்ப்பிற்கு வித்தாய் இருந்த திருப்பதி கூறுகையில், 'மன்றங்கள் வைத்து எத்தனையோ நலப்பணிகளை சுற்றியுள்ள கிராம இளைஞர்கள் செய்தார்கள். நம்ம ஊரிலும் ஒரு மன்றம் உருவாக்குவோம் என்று சிலர் ஒன்று சேர்ந்து மகாகவி பாரதி மீதான பற்றால் அவர் பெயரிலேயே நற்பணி மன்றம் உருவாக்கி இந்த பனை விதைகளை ஊர் ஊராக தேடி அலைந்து சேகரித்து கொண்டு வந்து புதைத்தோம். சிறுவர்களை அழைத்து மிட்டாய் வாங்கி கொடுத்து பனை விதைக்கச் செய்தேன். இப்போது எங்கள் தேவைக்கு மட்டுமின்றி ஆர்வமாக பனை விதை தேடும் பல கிராம இளைஞர்களுக்கும் நாங்கள் விதை கொடுக்கிறோம். இன்று வரை விதை புதைப்பதை நிறுத்தவில்லை நாங்கள்'' என்கிறார்.
மகாகவி பாரதி நற்பணி மன்றத்தினர் செய்த அந்த மகத்தான பணியை அவ்வூரில் இன்றைய இளைஞர்களும் சிறப்பாக செய்து வருகிறார்கள். சத்தமில்லாமல் சாதித்த பாண்டிக்குடி கிராம மக்களை பாராட்டுவோம்.