Skip to main content

குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் வனவிலங்குகள்; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

Villagers fear wild animals roaming inside residential areas nilgiri

 

நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வனவிலங்குகளின் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள், சிறுத்தைகள், கரடிகள் போன்ற வனவிலங்குகள், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள்ளும், குறிப்பாக விவசாய நிலங்களை நோக்கியும் வரத் துவங்கி விட்டன.

 

இந்நிலையில், குன்னூர் பகுதி சிங்காரா எஸ்டேட்  தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்தது. அந்த தோட்டத்தின் நடுவில் இருக்கும் பாறை மீது ஓய்வு எடுத்த சிறுத்தையைப் பார்த்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து சிறுத்தையை வீடியோ எடுத்த தொழிலாளர்கள் அதை வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

 

சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் ''இந்த இடம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ளதால், விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதனால் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்பவர்கள், மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று குன்னூர் வனச்சரகர் சசிகுமார் அப்பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இதைத்தொடர்ந்து, கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீருக்காகக் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை 7 மணியளவில், கோத்தகிரி கண்ணிகா தேவி காலணிக்கு இரண்டு கரடிகள் உலா வந்தது. இதைப்பார்த்து, பதறிய பொதுமக்கள் சுற்றித்திரியும் கரடிகளை தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி உலா வரும் வனவிலங்குகளிடம் இருந்து எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்