'கூத்துப் பட்டறை' நிறுவனர் ந.முத்துசாமி இன்று சென்னையில் காலமானார். இவருக்கு 83 வயதாகிறது. நாற்பதாண்டுகளுக்குமுன் இவர் சென்னையில் ’கூத்துப் பட்டறை’யை தொடங்கினார். பசுபதி, விதார்த், கலைராணி, சோமசுந்தரம், தலைவாசல் விஜய், விஜய்சேதுபதி போன்ற பெரும் நடிகர்கள் எல்லாம் தமிழ் சினிமாவிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அதற்கெல்லாம் இவர்தான் காரணம்.
இன்று தமிழ்நாட்டு மக்களால் அன்புடன் மக்கள் செல்வன் என்று அழைக்கக்கூடிய விஜய்சேதுபதி இவரின் கூத்துப்பட்டறையில்தான் முதன்முதலில் தன் சினிமா பயணத்தை தொடங்கினார். ஆனால் நடிகனாக இல்லாமல் வேறொரு பணிக்காக அந்தப் பட்டறையில் சேர்ந்திருக்கிறார், பின் நடிப்புத் துறையில் வந்திருக்கிறார். இதைப் பற்றி விஜய்சேதுபதியின் குருவும், கூத்துப்பட்டறை நிறுவனருமான ந.முத்துசாமி, முன்பு ஒரு இடத்தில் பேசியிருந்தார். இன்று, அவர் மரணமடைந்தார் என்ற செய்தி வந்ததும் அதுதான் நினைவுக்குவந்தது.
அதில் அவர் பேசியது "கூத்துப்பட்டறைக்கு விஜய்சேதுபதி நடிப்பதற்காக வரவில்லை, கணக்கெழுதத்தான் வந்தார். 2004-ல் சுனாமி வந்தபிறகு நாகப்பட்டினம் கடற்கரை கிராமங்களில் நாடகம்போட போகும்போதுதான் விஜய்சேதுபதி முதல் முதலாக நாடகத்தில் நடித்தார். நடிப்பு என்பது அவரிடத்திலே இயல்பாக இருந்தது. கூத்துப்பட்டறையில் இருந்து அவர் நடிப்பை கற்றுக்கொள்ளவில்லை. கூத்துப்பட்டறை அவருக்கு ஒரு வாய்ப்புக்கொடுத்தது. அதை அவர் பயன்படுத்திக்கொண்டார். இன்று அவர் பெரிய நடிகராக மாறிவிட்டார். அவர் இன்னும் வளர என் வாழ்த்துகள்." என்று ந.முத்துசாமி சில மதங்களுக்குமுன் பேசியிருந்தார்.