தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் மீது மேலும் வழக்குகளை தொடர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கோரிய நிலையில், கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியபோது, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளுக்காக ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரண்டு முறை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்த நிலையில் இன்று ஜாமீன் கோரிய வழக்கு மீண்டும் விசாணைக்கு வந்தபோது, வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை நாகர்கோவிலில் தங்கி காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது நீதிமன்றம்.
நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டாலும் அவர் இன்று வெளியே வர முடியாத நிலை உள்ளது. உளுந்தூர்பேட்டை மற்றும் நெய்வேலியில் தொடரப்பட்ட வழக்கில் அங்குள்ள நீதிமன்றத்திலுள்ள சட்ட நடவடிக்கைகளை முடித்து நாளை அல்லது நாளை மறுநாள்தான் அவர் வெளியே வர முடியும் என்கிறார்கள்.
இந்தநிலையில் தமிழக அரசு, வேல்முருகனை மீண்டும் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. வேல்முருகன் சிறையில் இருந்தபோது, திண்டுக்கல் அருகே டாஸ்மாக் சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரி மீது குண்டு வீசியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சிலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது காவல் துறை. இந்த வழக்கில் வேல்முருகனை சேர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.