Skip to main content

'அரசியலுக்கு வா' என அழைக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் ரஜினி பெயரில் பொங்கல் உதவி வழங்கும் ரஜினி மன்றம்!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

'நான் அரசியலுக்கு வரவில்லை 'என கடந்த மாதம் அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினி அரசியலுக்கு வந்தே ஆகவேண்டும்மென ரசிகர்களின் ஒருப்பிரிவினர் போராட்டம் நடத்த முடிவு செய்ய, அதனை மன்ற பொறுப்பாளர் சுதாகர் வேண்டாம் என வேண்டுக்கோள் விடுத்தார்.

 

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்கிற அறிவிப்பு, மன்ற பொறுப்பாளரின் வேண்டுக்கோள் போன்றவற்றை மீறி ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்மென அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இந்த வாரத் தொடக்கத்தில் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்துக்கு பின் மீண்டும் இல்லை என உறுதியான ஒரு அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.

 

அரசியல் கட்சி தான் கிடையாது, ஆனால் பொதுத்தொண்டு வழக்கம் போல் மன்றத்தின் சார்பில் நடத்தப்படும் என அறிவித்திருந்தார் ரஜினிகாந்த். அரசியல் கட்சியில்லை என்றதும் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் சோர்வடைந்த நிலையில், சில மாவட்டங்களில் ரசிகர் மன்றத்தினர் சோர்வடையாமல் தொடர்ந்து சேவைப்பணியை செய்ய துவங்கியுள்ளனர்.

 

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பொங்கல் விழாவினை முன்னிட்டு 100-க்கும் அதிகமான ஏழை மக்களுக்கு பொங்கல் அரிசி, புடவை, வேட்டி, துண்டு, கரும்பு, இனிப்பு என மாவட்ட தலைவர் சோளிங்கர் ரவி வழங்கினார். இந்த விழா சோளிங்கரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

 

கரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து நடைபெற்ற இந்தவிழாவில் நூற்றுக்கும் அதிகமான பயனாளிகளுடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

 

ரசிகர் மன்றத்தின் ஒருப்பகுதியினர் 'அரசியல் களத்துக்கு வா தலைவா' என அழைத்துக்கொண்டு இருக்கும் நிலையில், வேலூர் மாவட்ட ரசிகர் மன்றத்தினர், உங்கள் விருப்பமே எங்கள் விருப்பம் என முடிவு செய்து அரசியலுக்கு வா என அழைக்காமல் வழக்கம் போல், பொங்கல் வாழ்த்து தெரிவிக்கவும், இல்லாத வரிய நிலையில் உள்ள மக்களுக்கு ரஜினி பெயரில் உதவும் பணியை செய்ய துவங்கியுள்ளது மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்