நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் மட்டும் தனியாக நடைபெற்றது. இதனால் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கதிர் ஆனந்துக்கும்- அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கும் இடையே தேர்தல் களத்தில் கடுமையான போட்டி நிலவியது.
அப்போது இரு தரப்பும் அதிக வாக்குகள் வாங்கி தருபவர்களுக்கு சிறப்பு பரிசு என அறிவித்து இருந்தது. அதேநேரத்தில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 16 வாக்குசாவடிகள் உள்ளன. இந்த 16 வாக்குசாவடியில் யார் திமுகவுக்கு அதிக வாக்கு வாங்கி தருகிறார்களோ அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் என் சொந்த நிதியில் இருந்து தருவதாக திமுக வேலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் கூறியிருந்தார்.
தேர்தல் முடிந்து திமுக வேட்பாளர் வெற்றி பெற்று இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில், ஏற்கனவே சொன்னதுப்போல் 16 பூத்களில் மேல்குப்பம் ஊராட்சி திமுக கழக நிர்வாகிகளை தனது இல்லத்துக்கு அழைத்த ஞானவேலன், தனது சொந்த நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கினார்.
இதேபோல் அதிக ஓட்டுவாங்கி தரும் தொகுதி பொறுப்பாளர்கள், தொகுதி நிர்வாகிகளுக்கு தங்க செயின் வழங்கப்படும் என திமுகவிலேயே அறிவிக்கப்பட்டுயிருந்தது. அது நடக்குமா என எதிர்பார்ப்பில் உள்ளார்கள் அதிக ஓட்டு வாங்கி தந்த நிர்வாகிகள்.