வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் சென்னை ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான காவலர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் வரை செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது பி3 கோச்சில் சந்தேகத்திற்கு இடமாக சூட்கேசுடன் இருந்த கோயம்புத்தூர் மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அனந்த நாராயணனிடம் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். பின்னர் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் தங்கம் மற்றும் கட்டுக்கட்டாகப் பணம் இருப்பது தெரிய வந்தது.
இதற்கு எந்த வித உரிய ஆவணமும் இல்லாததால் சுமார் 2 கிலோ 728 கிராம் தங்கம், 35 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்த ரயில்வே காவலர்கள், அனந்த நாராயணனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அனந்த நாராயணன் நகை வியாபாரி என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் பணம் பிடிபட்ட அனந்த நாராயணனை ரயில்வே காவல்துறையினர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் தொடர்ந்து ஆனந்த நாராயணனிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் என்றும் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் காட்பாடி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.