ரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 5ந்தேதி வாக்குபதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் ஜீலை 11ந்தேதி முதல் நடைபெற்றுவருகிறது. முதல் நாளான ஜீலை 11ந்தேதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உட்பட 8 பேர் மனுதாக்கல் செய்தனர்.
இரண்டாவது நாளான இன்று சுயேட்சையாக நிற்பவர்கள் வந்து மனுதாக்கல் செய்கின்றனர். அதில் பலரின் கவனத்தையும் ஈடுத்தவர் நூர்முகமது. வேலூர் தொகுதியை சேர்ந்த இவர் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட குதிரையில் மனுதாக்கல் செய்ய வந்தார். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு குதிரையில் தன்னந்தனியாக வந்தவரை பொதுமக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர்.
குதிரையில் வந்த நூர்முகமதுவை, போலிஸார் தடுத்து நிறுத்தி குதிரை வளாகத்துக்குள் அனுமதியில்லை எனச்சொல்லி வெளியேவே நிறுத்தினர். அவர் குதிரையில் இருந்து இறங்கி அங்கிருந்த ஒரு மரத்தில் குதிரையை கட்டிவிட்டு பின் உள்ளே சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.