Skip to main content

ஏட்டு உத்தரவை மதித்த இன்ஸ்பெக்டர்; கைது செய்யச்சொன்ன நீதிபதி

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

 


வேலூர் மாநகரத்தை அடுத்த பொய்கை கிராமத்தை சேர்ந்தவர் 60 வயதை கடந்த ராமதாஸ். சி.எம்.சி மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு ஒய்வு பெற்றுள்ளார். இதே தெருவில் ராமதாஸ் வீட்டுக்கு அருகில் சித்ரா என்கிற பெண்மணி தனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி பல இளைஞர்கள், சில வழக்கறிஞர்கள் வந்து நள்ளிரவுக்கு பின் திரும்பி செல்கின்றனர்.

 

hc


இவரது வீட்டிற்கு வந்து இறங்கும் அரசின் ரேஷன் அரிசி இரவு நேரத்தில் ஆட்டோ மூலமாக கடத்தப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர் இந்த பகுதியை சேர்ந்தவர்கள். அதில் குடிபொருள் புலனாய்வு பிரிவினர் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர்.


கடந்த ஜனவரி மாதம், இரவு 9 மணியளவில் தனது வீட்டுக்கு ராமதாசின் மகன் வந்தபோது சில இருசக்கர வாகனங்கள் தெருவை அடைத்துக்கொண்டு நின்றுள்ளது. இதுதொடர்பாக வண்டியை ஓரமாக நிறுத்த வேண்டியதுதானே என கேள்வி எழுப்பியுள்ளனர். இது வாய் சண்டையாக மாறியுள்ளது.


அந்த பெண்மணி தனது வீட்டுக்கு வருபவர்களிடம், ராமதாசை மிரட்டிவிட்டு செல்லுங்கள் எனச்சொல்ல சிலர் மிரட்டல் தெனியில் பேசிவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். ஒருமுறை சில வழக்கறிஞர்கள் குடித்துவிட்டு ராமதாஸ், அவரது மனைவி மற்றும் மருமகளை மோசமான வார்த்தையில் பேசி தாக்கியுள்ளனர். இதில் ராமதாஸ்க்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.


இதுதொடர்பாக சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார் ராமதாஸ். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் அந்த காவல்நிலையத்தின் எஸ்.பி ஏட்டு தீனதயாளன் என்பவர் தடுத்துவந்துள்ளார். எஸ்.பி ஏட்டு வின் உத்தரவை இன்ஸ்பெக்டரும் ஏற்றுக்கொண்டுள்ளார். அதற்கு அடுத்து வந்த இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் எஸ்.பி ஏட்டு உத்தரவை ஏற்றுக்கொண்டு, அந்த பெண்மணிக்கும், தாக்கிய சில வழக்கறிஞர்களுக்கும் ஆதரவாக நடவடிக்கை எடுக்காமல் தடுத்துவந்துள்ளார்.


இதனால் பாதிக்கப்பட்ட ராமதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நடவடிக்கை அறிக்கையோடு காவல்நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். மூன்று முறை உத்தரவிட்டும் உயர்நீதிமன்றத்தில் ஆய்வாளர் ஆஜராகாததால், நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஆய்வாளரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென வேலூர் எஸ்.பி பர்வேஷ்குமார்க்கு ஆகஸ்ட் 19ந்தேதி உத்தரவிட்டுள்ளார் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ்.


அந்த உத்தரவில் ஜாமீன் இல்லாத பிடிவாரண்ட் பிரப்பித்து உத்தரவிட்டுள்ளார். ஆய்வாளர் அண்ணாதுரை தற்போது அந்த காவல்நிலையத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு அரக்கோணம் சரகத்தில் பணியாற்றுவதாக கூறுகின்றனர் காவல்துறை தரப்பில்.


பாதிக்கப்பட்ட ராமதாஸ் குடும்பத்தை சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு கும்பல் வந்து மிரட்டிவிட்டு சென்றுள்ளது. இதுப்பற்றி மீண்டும் புகார் தந்துள்ளார். அந்த புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வைத்துள்ளனர் என்கின்றனர் அந்த குடும்பத்தார்.

சார்ந்த செய்திகள்