Skip to main content

பொது விவாதத்திற்கு நாங்கள் தயார், பா.ஜ.கவினர் தயாரா? வி.சி.க ந.செல்லதுரை பேட்டி

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

VCK Selladurai interview

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும். மேலும், அரசியல் ஆதாயத்திற்காக அவதூறு பரப்பும் பா.ஜ.க உள்ளிட்ட சனாதன அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட வி.சி.க மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ந.செல்லதுரை, அந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக நக்கீரன் இணையத்திற்குக் கொடுத்த பேட்டி..

 

“ 'வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், மனுதர்மத்தில் பெண்களை இப்படித்தான் நடத்த வேண்டும் எனப் பல்வேறு விஷயங்கள் பெண்களுக்கு எதிராக இருந்தது. அதனால் அவர்களுக்காகப் போராட வேண்டிய தேவை பெரியாருக்கு வந்தது' என 40 நிமிடங்கள் பேசிய உரையில், அவர் கோடிட்டுக் காட்டிய 40 வினாடிகளை மட்டும் எடுத்து இவர் பேசியதாகத் திரித்துள்ளனர். அதன் மூலம், 'திருமாவளவன் பெண்களைத் தவறாகப் பேசிவிட்டார்' என அவதூறு பரப்பினார்கள். அதற்கு விளக்கம் சொல்லும் வகையிலும் பாஜகவின் எச்.ராஜா, குஷ்பு, உள்ளிட்டோர் அவதூறாகப் பேசிவருகிறார்கள். அதனைக் கண்டிக்கும் வகையில் நடந்ததுதான் இன்றைய கூட்டம்.


மேலும், பாஜகவினர், சங்பரிவார்கள், கற்றறிந்த ஞானிகள் ஆகியோரை அழையுங்கள் நாங்கள் பொதுவிவாதத்திற்குத் தயாரக இருக்கிறோம். இத்தனை வருடங்கள் கழித்தும் மனுதர்மம், நடைமுறையில் இருக்கிறதா எனக் கேட்கிறார்கள். மனுதர்மம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்பதையும் விளக்கமாகச் சொல்கிறோம். உதராணத்திற்கு கள்ளிப் பால் கொடுத்து பெண் குழந்தையைக் கொன்ற விஷயமும் இப்போதுதான் நடந்தது. ஒரு பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் சமூகத்தில்தான் நாம் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அதனை நியாயப்படுத்தும் சாமியார் முதல்வரைக் கொண்டுள்ள சமூகத்தில்தான் நாம் வழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட சமுதயாம் மட்டும்தான் கோவிலுக்குள் செல்ல முடியும் என நடைமுறை இன்றும் இருக்கிறது. சாதிக்கு ஒரு நீதி என்பதும் நடைமுறையில் இருக்கிறது. இவையெல்லாம் இன்னும் மனுதர்மம் நடைமுறையில் இருக்கிறது என்பதற்கான உதராணம்.


நாங்கள் ஆதாரத்துடன் குஷ்பு, எஸ்.வி.சேகர் மீதெல்லாம் புகார் கொடுத்தாலும் அதனை ஏற்று விசாரணை நடத்தாத காவல்துறையினர், பொய்யான 40 வினாடியுள்ள வீடியோவைக் கொடுத்ததும், எங்கள் தலைவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதனால் காவல்துறையினரை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது” என்று தெரிவித்தார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்