
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் செல்வகணபதி(25). இவர் கிடைக்கும் வேலைகளை செய்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் செல்வகணபதிக்கு அடிக்கடி மன அழுத்தம் ஏற்பட்டு சில நாட்கள் யாருடனும் பேசாமல் தனிமையில் இருப்பதும், அவரை அறியாமலேயே எதையாவது செய்வதுமாக இருந்து வந்துள்ளார். இதனால், இவரை சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று கூறாகின்றனர்.
இந்த நிலையில் தான் இவரது மன அழுத்தம் பிரமையை போக்க நினைத்த அவரது பெற்றோரிடம் சில உறவினர்கள் சம்பட்டிவிடுதி அருகே வீரசோழபுரத்தில் இருக்கும் அருள்வாக்கு சுவாமி ஜி குமாரிடம் அழைத்துச் சென்றால் செல்வகணபதியை பிடித்துள்ள பேயை விரட்டிவிடுவார் என்று கூறியுள்ளனர். அதனை நம்பி ஞாயிற்றுக் கிழமை(27.4.205) இரவு பிரம்படி சாமியார் குமாரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மன அழுத்தத்தில் இருந்த செல்வகணபதிக்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறிய சாமியார் குமார் தான் வைத்திருந்த பிரம்புகள், சாட்டையால் அடித்துள்ளார். அதில் செல்வகணபதி வலி தாங்கமுடியாமல் கதறி அழுதுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று(28.4.2025) காலை சாமியாரிடம் சாமியாரிடம் இருந்து வீட்டிற்கு ஆலங்குடி வழியாக பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளனர். பேருந்து ஆலங்குடி அம்புலி ஆற்றுப் பாலம் அருகே உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது, திடீரென பேருந்தில் இருந்து குதித்து ஓடிய செல்வகணபதி, அம்புலி ஆற்றுக் கரையில் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடியில் இருந்து நெய்வேலி செல்லும் 2,500 மெகா வாட் உயரழுத்த மின்சாரம் செல்லும் கோபுரத்தின் மீது ஏறத் தொடங்கினார். அவரைத் துரத்தியபடி வந்த அவரது உறவினர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரை கீழே இறக்க முயற்சி செய்தும் இறங்கவில்லை. தகவல் அறிந்து வந்த ஆலங்குடி போலீசார் மற்றும் ஆலங்குடி தீயணைப்புத் துறையினர் செல்வகணபதியை கீழே கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனால், மின்கோபுரத்தின் அருகே யாரும் சென்றாலே அவர் உயரமாக ஏறத் தொடங்கினார். இதனால் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் செய்வது அறியாது திகைத்தனர். மின்சாரம் நிறுத்தப்பட்டது. அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அப்பகுதியில் குவியத் தொடங்கினர். தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கோபுரத்தில் இருந்த செல்வ கணபதி ஆட்கள் தள்ளி நின்ற போது கீழே இறங்கி வந்து தண்ணீரை மேலே தூக்கிப் போடச் சொல்லி தாகத்தை தீர்த்துக் கொண்டு மீண்டும் ஏறி விட்டார். சுமார் 5 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கீழே இறங்கியுள்ளார்.
இது போன்ற உயர் கோபுரங்களில் ஏறியவர்களை மீட்க உயரமான ஏணி போன்ற உபகரணங்கள் தீயணைப்புத் துறையினரிடம் இல்லாததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. ஆகவே தீயணைப்புத் துறையினருக்கு மீட்புப்பணிக்கான அனைத்து உபகரணங்களும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது குறித்து அங்கு நின்ற இளைஞர்கள் கூறும் போது, “மன அழுத்தத்தில் உள்ள செல்வகணபதிக்கு மனநல மருத்துவர்களிடம் சிகிச்சை அளிக்காமல் பேய் பிடித்திருப்பதாக சாமியாரிடம் அழைத்துச் சென்று சாட்டையடி பிரம்படி கொடுத்ததால் தான் அந்த வலியும் வேதனையும் அவமானமும் தாங்காமல் தான தன் உயிரையும் துச்சமாக நினைத்து உயரழுத்த மின்கம்பத்தில் ஏறியுள்ளார். அந்த சாமியார் குமார் ஏற்கனவே திருப்பூர் உள்பட பல இடங்களில் பேய் விரட்ட இப்படி சவுக்கடி, பிரம்படி வைத்தியம் செய்ததால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர் தான். இப்ப சம்மட்டிவிடுதியில் பெரிய அளவில் குடில் அமைத்து பேய் விரட்டுவதாக சொல்லி பிரம்படி சாட்டையடி, குடுமிப்பிடி, தலையில் அடி கொடுக்கிறார். இதில் பெண்கள் ஏராளம் அடி வாங்குகிறார்கள். இதையெல்லாம் வீடியோவாக பதிவு செய்து சமூக வலை தளங்களிலும் வெளியிட்டு வருகிறார்” என்றனர்.