
கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர் ரக கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து கஞ்சா நெட்வொர்க் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கோவில்பட்டி அடுத்த மூப்பன்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து ரீ பேக்கிங் செய்து வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சொகுசு கார்களில் லேப்டாப், இண்டெர்நெட், ஐ போன்கள், வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்கள் மூலம் ஹைடெக் முறையில் கஞ்சா கைமாற்றப்படுவது தெரியவந்தது.
டி.எஸ்.பி. ஜெகநாதன், இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது, எஸ்.ஐ. செந்தில் வேல்முருகன், தனிப்பிரிவு காவலர்கள் முத்துராமலிங்கம், அருணாச்சலம், செஸ்லின் வினோத், கழுகாசல மூர்த்தி ஆகியோர் அடங்கிய போலீசார் கோவில்பட்டி மூப்பன்பட்டி பகுதியில் முகாமிட்டு ரகசியமாக கண்காணித்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை(27-4-25) மாலை மூப்பன்பட்டி மயானம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த காரை நோக்கி போலீசார் சென்றதும் சிலர் காரில் இருந்து இறங்கித் தப்பி ஓடினர். போலீசார் துரத்திச் சென்று அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த அருண்குமார் (23), நாகலாபுரத்தை சேர்ந்த கொம்பையா (21), வ.உ.சி. நகரைச் சேர்ந்த கார்த்திக் (20) கயத்தாறு தெற்கு கோனார் கோட்டையைச் சேர்ந்த மகாராஜா (17) என்பதும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநில சிறையில் உள்ள தங்களது கூட்டாளியை ஜாமீனில் வெளியே எடுப்பதற்காக, லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதால் பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சாவை டிராவல் பேக்குகளில் மூப்பன்பட்டி மயான பகுதிக்கு கொண்டு வந்து அங்கு பதுக்கி வைத்து ரீ பேக்கிங் செய்து சொகுசு கார் மூலம் ஹைடெக் தொழில்நுட்பத்தில் பிற பகுதிகளுக்கு சப்ளை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து கார் டிக்கியில் இருந்த டிராவல் பேக்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 23 கிலோ 750 கிராம் பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.
இதே போல் கோவில்பட்டி பாரதி நகர் பகுதியில் எஸ்.பி. சிறப்பு குழுவை சேர்ந்த ரமேஷ், எஸ்.ஐ. ராமச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அய்யர் மண்டபம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாரதிநகரை சேர்ந்த கரன்குமார் (25), வ.உ.சி. நகரை சேர்ந்த சங்கர நாராயணன் (26) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய சொகுசு காரில் ஹைடெக் முறையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கும்பல் அடுத்தடுத்து சிக்கி இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி