இன்று கடவுள் முருகன் பாலகனாகப் பிறந்தநாள். இந்தநாள் வைகாசி விசாகத் திருவிழாவாகவும் அனுசரிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் முருகனை வழிபட்ட பலன், இன்றைய வைகாசி விசாகம் நாளன்று வழிபட்டால் கிடைக்கும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் முருகன் அவதாரம் செய்த விசாகத் திருநாளன்று திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், கழுகுமலை உள்ளிட்ட முக்கியமான பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரளுவர். முருகப் பெருமானை தரிசிப்பார்கள். அன்றைய தினம் முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகப் பூஜைகள் அன்னதானங்கள் நடக்கும்.
ஆனால் கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24 முதல் 72 நாட்களாக பொது முடக்கம் தொடருவதால் ஆலயங்கள் பூட்டப்பட்டுவிட்டன. பக்தர்கள் குறைகளை சொல்லி முறையிட்டு ஆண்டவனை கூட வழிபட முடியவில்லை. தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாலயே வைகாசி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஆகம விதிகளை பின்பற்றும் பொருட்டு, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் ஆலயங்களில் பட்டர்கள் அறநிலையத்துறையின் சிறப்பு அனுமதி பெற்று வைகாசி விசாகமான இன்று முருகப் பெருமானுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்துள்ளனர். ஆனால் தடை காரணமாக பக்தர்கள் ஆலயத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அபிஷேகம் முடிந்தவுடன் ஆலயங்கள் பூட்டப்பட்டன.
இதே போன்ற நடைமுறைதான் தூத்துக்குடி மாவட்டத்தின் அடுத்த பிரசித்தி பெற்ற கழுகுமலை குமரன் ஆலயத்திலும் பின்பற்றப்பட்டு ஆலய நடை சாத்தப்பட்டது. அங்கு விசாகமன்று முருக தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், தாங்கள் கொண்டு வந்த பாலை ஆலயத்தின் வெளியே உள்ள பாத்திரத்தில் முருகன் அபிஷேகத்திற்காக ஊற்றிவிட்டு, பூட்டிய ஆலயத்தை வழிபட்டுவிட்டு கிரிவலமாக கழுகுமலை, மலை நகரை சுற்றி வலம்வந்து வணங்கி சென்றனர். பக்தர்கள் ஊற்றிய பாலை கொண்டு முருகனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
கொடூர கரோனாவின் ஆக்டோபஸ் கரங்கள், பக்தர்களின் ஆலய தரிசனத்தையும் தடை செய்து நீங்காத பாவத்தைக் கொட்டிக் கொண்டது என்று புலம்புகின்றனர் தீவிர பக்தர்கள்.