வடபழனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்
வடபழனி சந்திப்பு - 100 அடி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆற்காடு சாலை கோடம்பாக்கத்தில் இருந்து வடபழனி வழியாக போரூர், வளசரவாக்கம், விருகம்பாக்கம் செல்லும் வாகனங்கள், வடபழனி சந்திப்பில் நேராகவும், வலதுபுறமும் செல்ல அனுமதி இல்லை. மாறாக, இடதுபுறம் சர்வீஸ் சாலையில் திரும்பி, வடபழனி மெட்ரோ ரயில் பாலத்தின் அடியில் ‘யூ’ டர்ன் செய்து சர்வீஸ் சாலையில் வந்து இடதுபுறம் திரும்பி ஆற்காடு சாலை செல்லலாம். கோயம்பேடு செல்லும் வாகனங்கள் நேராக செல்லலாம். மேலும், அசோக் நகரில் இருந்து சர்வீஸ் சாலை வழியாக வடபழனி சந்திப்பு வரும் வாகனங்கள், வலதுபுறம் திரும்பி கோடம்பாக்கம் செல்லலாம்.
விருகம்பாக்கத்தில் இருந்து வடபழனி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள், இடதுபுறம் திரும்பி கோயம்பேடு, வலதுபுறம் திரும்பி கோடம்பாக்கம் மற்றும் அசோக் நகர் ஆகிய இடங்களுக்கு செல்லலாம். மேலும், வடபழனியில் உள்ள போரம் விஜயா மாலில் இருந்து வளசரவாக்கம் செல்லும் வாகனங்கள், வடபழனி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி சர்வீஸ் சாலையில் செல்லும் வாகனங்கள், வடபழனி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி சர்வீஸ் சாலையில் சென்று பாலத்தின் அடியில் ‘யூ’ டர்ன் செய்து சர்வீஸ் சாலை வந்து இடதுபுறம் திரும்பி ஆற்காடு சாலை செல்லலாம்.
100 அடி சாலை நெற்குன்றம் பாதையில் இருந்து சர்வீஸ் சாலை வழியாக வடபழனி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள், நேராகவும், வலதுபுறம் செல்லவும் அனுமதி இல்லை. மாறாக இடதுபுறம் திரும்பி கோடம்பாக்கம், துரைசாமி சாலை செல்லலாம். மேலும், வடபழனியில் உள்ள போரம் விஜயா மால், சிம்ஸ் மருத்துவமனை, நெற்குன்றம் பாதை மற்றும் கோயம்பேடு செல்லும் வாகனங்கள் பாலத்தின் அடியில் ‘யூ’ டர்ன் செய்து செல்லலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.