வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக மாறி கரையைக் கடந்தது. இதனால் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்து வருகிறது. இதில் திங்கள் கிழமை பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் பண்ருட்டி அருகே திருவாமூர் ஊராட்சியையொட்டி ஓடும் கெடிலம் ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கன அடி வெள்ள நீர் ஆற்றின் முழு கொள்ளளவுடன் செல்கிறது. இந்த நிலையில் திருவாமூரில் இருந்து சேந்தநாடு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ள நீர் ஆற்றின் கரையோரத்தில் உள்ள விளை நிலங்களுக்கு சென்றதால் மாணவரி பயிர்கள், நெல், வாழை, மரவள்ளி என பணபயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தகவல் அறிந்த நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் சம்பவ இடத்திற்குச் சென்று விவசாயிகளையும் அப்பகுதியில் உள்ள பொது மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும் இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பொதுமக்களை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். அதேபோல் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை பாலத்தில் தண்ணீர் பாலத்தின் மேல் செல்வதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வழியிலே நிறுத்தப்பட்டுள்ளது.