அண்மையில் கோவை மேயர் உட்பட பல மாவட்ட ஆட்சியர்களின் புகைப்படங்களை வைத்து மோசடி கும்பல் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான புகார்கள் எழுந்தது. அதிலும் குறிப்பாக சென்னை மேயர் ப்ரியாவின் புகைப்படத்தை வாட்ஸ் அப் டிபி ஆக வைத்து அவர் மெசேஜ் செய்வது போல் சென்னை மண்டல அதிகாரிகள் மூன்று பேரிடம் அமேசான் கிப்ட் கார்ட் மூலமாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பணம் கேட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த சென்னை மேயர் பிரியா பெரியமேடு காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில் இந்த நூதன மோசடி குறித்து சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஞான ராஜசேகரன் பெயரில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு மோசடி முயற்சி நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்து நிலையில், ஞான ராஜசேகரன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'அன்புடையீர், என் பெயரில் சில விஷமிகள் ஃபேக் ஐடி உருவாக்கி ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் செய்வதாகவும், அவசரமாக பணம் அனுப்பக் கோருவதாகவும் எனக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தயவு செய்து இதைப் போன்ற கோரிக்கைகளுக்கு சிறிதும் செவிசாய்க்க வேண்டாம் என்று எல்லோரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது சம்பந்தமாக சைபர் க்ரைம் செல் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஞான ராஜசேகரன் பாரதி, பெரியார், முகம், மோகமுள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.