உரிமம் இல்லாத கல்குவாரிகள் தொடர்ந்து செயல்பட அனுமதித்த கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குழி தாலுகா, மொரட்டுப்பாளையம் கிராமத்தில், நிபந்தனைகளை மீறி செயல்பட்ட கல் குவாரிக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்த போது, குறிப்பிட்ட அந்த பகுதியில் உரிமம் இல்லாமல் ஏராளமான கல் குவாரிகள் இயங்கி வருவதாகவும், தங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த பகுதியில் இயங்கும் குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் அசோக்குமாரை நியமித்து நீதிபதி உத்தரவிட்டார். மூன்று நாட்கள் ஆய்வு நடத்தி, வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில், அந்த பகுதியில் 64 குவாரிகள் உரிமம் இல்லாமல் செயல்படுவதாகவும், உரிமம் பெற்றுள்ள 24 குவாரிகளில், 18 குவாரிகள் நிபந்தனைகளை மீறி செயல்படுவதாகவும் கூறி அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையை படித்த நீதிபதி, குவாரிகளை அவ்வப்போதைக்கு ஆய்வு செய்யாததால் நிர்வாகத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, உரிமம் இல்லாமல் செயல்படும் 64 குவாரிகளையும் மூட நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
மேலும், இந்த குவாரிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், அவற்றை செயல்பட அனுமதித்த கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன், வருவாய் இழப்பை அவர்களிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஒரே பதிவு எண்ணை கொண்ட கனரக வாகனம் மட்டும் பயன்படுத்தப்பட்டதால் TN 55 Z 7753 அந்த வாகனத்தை பறிமுதல் செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.
மேலும் விதி மீறி செயல்படும் உரிமம் பெற்ற குவாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.