பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. பொருளாதாரச் சிக்கலினால் உயர்கல்வி கற்பது தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கென சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தை நடப்பு ஆண்டில் அறிவித்துள்ளது மத்திய அரசு. அதன்படி பிளஸ்-2 முடித்துவிட்டு தற்போது பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் இந்த உதவித்தொகையை பெற தகுதியானவர்கள்.
பிளஸ்-2 தேர்வில் குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ்-2வை பள்ளியில் நேரடியாக முடித்திருக்க வேண்டும். தனித்தேர்வராகவோ, தொலைநிலையிலோ படித்தவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
நடப்புக் கல்வி ஆண்டில், யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரி, பல்கலைகளில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் படித்துக் கொண்டிருக்க வேண்டும். டிப்ளமோ படிப்பவர்களும், தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் படிப்பவர்களும் இந்த உதவித்தொகையை பெற இயலாது.
நாடு முழுவதும் மொத்தம் 82 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் மாணவிகளுக்கு வழங்கப்படும். பயனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கும் உதவித்தொகை பகிர்ந்தளிக்கப்படும். அதன்படி தமிழ்நாட்டிற்கு மொத்தம் 4883 மாணவர்களுக்கும், புதுச்சேரிக்கு 78 பேருக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
உதவித்தொகையானது ஆண்டுக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின்படி, ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். உதவித்தொகை பெற விரும்பும் மாணவரின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதற்கான சான்று, ஆதார் எண், மாணவரின் பெயரில் உள்ள வங்கிக்கணக்கு எண் ஆகிய தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு உதவித்தொகை பெற்றவர்கள் இந்த ஆண்டு புதுப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு பட்டப்படிப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 75 சதவீத வருகைப்பதிவு இருத்தல் அவசியம். ராகிங் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டிருத்தல் கூடாது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.10.2019. கூடுதல் விவரங்களுக்கு www.scholarships.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம். விண்ணப்பிப்பது தொடர்பான உதவிக்கு 0120- 6619540 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் (அல்லது) helpdesk@nsp.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.