மத்திய அரசு பட்ஜெட்டில், '15 ஆண்டுகள் ஓடிய வாகனங்கள் காலாவதி பட்டியலில் சேர்க்கப்படும்' என அறிவிக்கப்பட்டதால் விரக்தி அடைந்த சேலத்தைச் சேர்ந்த ஏழை ஆட்டோ ஓட்டுநர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
சேலம் பொன்னம்மாபேட்டை செங்கலணை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (59). இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி பத்மாவதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டிவந்த சரவணன், அண்மையில் ஒரு பழைய ஆட்டோவை வாங்கி சர்வீஸ் செய்து, ஓட்டி வந்தார்.
கடந்த 1- ஆம் தேதி மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, சுற்றுச்சூழல் நலன் கருதி 15 ஆண்டுக்கு மேலான வாகனங்கள் காலாவதி ஆனதாக அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. பலரிடம் கடன் பெற்று பழைய ஆட்டோவை வாங்கி ஓட்டிவந்த நிலையில், அரசின் இந்த திடீர் அறிவிப்பால் தான் எப்படிக் கடனை அடைப்பேன் என குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் புலம்பி வந்தார்.
இனி நான் எப்படிக் குடும்பம் நடத்துவேன் என புலம்பியபடி கடும் விரக்தியில் இருந்த சரவணன், பிப். 3- ஆம் தேதி தற்கொலை செய்யும் நோக்கில் விஷம் குடித்துவிட்டார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (பிப். 12) அதிகாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தற்கொலைக்கு முன்பாக சரவணன், தான் வைத்திருந்த நோட்டு புத்தகத்தில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கடிதத்தில், ''போதிய வருமானம் இல்லாததாலும் கடன்சுமை காரணமாகவும் 15 ஆண்டு வண்டிகள் காலாவதியானதாக அறிவிக்கப்பட்டதாலும் தற்கொலை செய்துகொள்கிறேன். இந்த முடிவுக்கு நானே காரணம். என் குடும்பத்தாரை தொந்தரவு செய்யாதீர்கள்'' என எழுதி வைத்துள்ளார்.
இந்த கடிதத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் அதுபற்றியும் விசாரித்து வருகின்றனர். 15 ஆண்டுகள் ஓடிய வாகனங்கள் காலாவதி பட்டியலில் சேர்க்கப்படும் எனும் மத்திய அரசின் முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.