ஐ.நா.வின், ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக மதுரை சலூன் கடைக்காரர் மகள், மாணவி நேத்ரா தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் ஐ.நா இந்த மாதிரியான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை. மேலும் மாணவி நேத்ராவை நல்லெண்ண தூதராக நியமித்தது யூனியன்-ஏடிஏபி எனும் ஒரு அரசுசாரா அமைப்பாகும். இந்த அமைப்பு ஐ.நா சபையின் துணை நிறுவனமோ அல்லது துணை அமைப்போ கிடையாது. மேலும் அந்த அமைப்பு நடத்தும் கூட்டத்தில் பேசவும் மாணவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கூட்டத்தில் பேச வாய்ப்பு கிடைத்தது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நேத்ரா, "உலகம் முழுவதும் வறுமையே இருக்கக்கூடாது என்பதே எனது ஆசை, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி பேசுவேன். சாதாரணமாக செய்த உதவிக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.