வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கும், மிக கனமழைக்கும் வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி தற்போது கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அறிவித்தபடி மழை பெய்து கொண்டிருக்கிறது. வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இரவு 08.20 மணி வரை மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும். எனவே இந்த 4 மாவட்டங்களுக்கு இன்று (17.12.2023)இரவு 08.20 மணி வரை ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. மேலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அதிகனமழை எச்சரிக்கை காரணமாக மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (18.12.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுத்திருந்ததும், திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை (18.12.2023) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.