Skip to main content

“சனாதன சர்ச்சை; சட்டப்படி எதிர்கொள்வேன்” - அமைச்சர் உதயநிதி

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Udhayanidhi has said will face cases against me according  law Sanatana dispute

 

சனாதன  சர்ச்சை விவகாரத்தில் என் மீதான வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்”  எனக் கூறியிருந்தார்.

 

இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையான நிலையில், பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் உதயநிதிக்கு எதிராகக் கருத்து தெரிவித்தனர். அதிலும் அயோத்தி சாமியார் ஒருவர் உதயநிதியின் தலையைக் கொண்டு வந்தால் ரூ. 10 கோடி சன்மானம் தருவதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சாமியாருக்கு எதிராகத் தமிழகத்தில் உருவ பொம்மை எரிக்கப்பட்டு, வழக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி சனாதன சர்ச்சை விவகாரத்தில் என் மீதான வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாமியார்களுக்குத்தான் இந்தக் காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு சாமியார் இடையில் புகுந்து என் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். என் தலையைவிட ‘முற்றும் துறந்தவரிடம் எப்படி 10 கோடி’ என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. தவிர பலர் என் மீது நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களிலும், மாண்பமை நீதிமன்றங்களிலும் புகார் அளித்து வருவதாகத் தெரிகிறது. இந்த நிலையில், ‘கொலை மிரட்டல் விடுத்த அந்தச் சாமியாரை கைது செய்ய வேண்டும்’ என்று கோரி நம் கட்சியினர் தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருவதாகவும், அந்தச் சாமியாரின் உருவ பொம்மையை எரிப்பது, அவரின் படத்தைக் கொளுத்துவது, கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது. 

 

நாம் பிறருக்கு நாகரிகம் கற்றுத் தருபவர்கள். நம் தலைவர்கள் நம்மை அப்படித்தான் வளர்த்தெடுத்துள்ளனர். எனவே, அதுபோன்ற காரியங்களை நம் இயக்கத் தோழர்கள் அறவே தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தவிர, நமக்கு இயக்கப் பணி, மக்கள் பணி என எண்ணிலடங்கா பணிகள் காத்திருக்கின்றன. முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு அரசின் சார்பிலும், கட்சியின் சார்பிலும் பல பணிகளை நம் முதலமைச்சர், கட்சித் தலைவர் நமக்கு வழங்கியுள்ளார்கள். இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டுக்கான பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் என ஏராளமான பணிகள் நமக்கு முன் உள்ளன. 

 

இவ்வளவு வேலைகள் இருக்கும்போது சாமியாரின் மீது வழக்குப் போடுவது, உருவ பொம்மையை எரிப்பது போன்ற, நேரத்தை வீணடிக்கக்கூடிய பணிகளில் நம் கழகத்தினர் எவரும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை, கட்சித் தலைவரின் வழிகாட்டுதலும், கட்சித் தலைமையின் ஆலோசனையைப் பெற்று சட்டத்துறையின் உதவியுடன் சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பகிர்ந்த தோழமை கட்சியின் தலைவர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

மேலும் ‘சனாதன தர்மம்’ எதை வலியுறுத்துகிறது, அதில் அப்படி என்னதான் சொல்லப்பட்டுள்ளது’ என்பதை நாடு தழுவிய அளவில் ஒரு பேசுபொருளாக மாற்றக் காரணமாக அமைந்த சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கும், அதை ஒருங்கிணைத்த த.மு.எ.க.ச தோழர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்