வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு இந்த ஆண்டு 2 ஆயிரம் ரூபாய் அரசின் சார்பில் உதவி வழங்கும் திட்டத்தினை சட்டமன்றத்தில் அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக ஏற்கனவே அரசிடம் உள்ள பி.பி.எல் பட்டியல் படி வழங்க முடிவு செய்தது.
இது கிராமங்களில் பெரும் மோதலை உருவாக்கியதால், தேர்தல் நேரத்தில் இது தங்களுக்கு எதிர்ப்பான அலைகளை உருவாக்கிவிடும் என்பதால், விடுப்பட்டவர்கள் தாங்கள் வறுமைக்கேட்டுக்கு கீழ் இருப்பவர்கள் என ஊரக வளர்ச்சி துறையிடம் எழுதி தந்தால் பரிசீலனை செய்து வழங்குவோம் என அறிவித்தது.
இதனால் ஒவ்வொருவரும் ''நான் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறேன்'' என ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு தந்து வருகின்றனர். அப்படி தரப்பட்ட மனுக்களில் திமுக மீதும், அதன் கூட்டணி கட்சிகள் மீது பற்று கொண்ட குடும்பத்தினரின் மனுக்களை, தகுதியிருந்தும் அதிமுகவினர் தள்ளுபடி செய்ய வைக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பலரின் மனுக்கள் ரிஜக்ட் செய்யப்பட்டதால் கோபமான அப்பகுதி திமுகவினர் இன்று (பிப்ரவரி 27ந் தேதி) காலை 12 மணியளவில் ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அவர்களை காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து சமாதானம் செய்தனர்.
தகுதியானவர்களை விட்டுவிட்டு பணக்காரர்களாக உள்ள அதிமுகவினருக்கு இந்த அதிகாரிகள் வழங்குகிறார்கள் என்றனர். தகுதியான அனைவருக்கும் வழங்கச்சொல்கிறோம் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்த பின்னர் சாலைமறியல் கைவிடப்பட்டது.