நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி பகுதியைச் சேர்ந்தவர் ரித்விக். 21 வயதான இவர் குன்னூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ரித்விக்கும் அதே கல்லூரியில் படித்து வரும் கோத்தகிரியைச் சேர்ந்த ரிக்சனும் நெருங்கிய நண்பர்கள். ரித்விக்கும் ரிக்சனும் டூவீலரில் கல்லூரிக்கு ஒன்றாக சென்று வீடு திரும்புவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் நடந்து கொண்டிருப்பதால் கடந்த 30 ஆம் தேதியன்று தேர்வெழுதிய ரித்விக் மற்றும் ரிக்சன், பின்னர் தங்கள் நண்பர்களோடு ஜாலியாக அரட்டை அடித்துவிட்டு அன்று மாலை 3.30 மணியளவில் இருவரும் ஒரே பைக்கில் வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் கேத்தி ரயில் நிலையம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு லாரி வந்துள்ளது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், அந்த சாலையில் சறுக்கி கீழே விழுந்துள்ளது. அப்போது துரதிர்ஷ்டவசமாக எதிரே வந்த லாரி அவர்கள் இருவர் மீதும் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி படுகாயமடைந்த ரித்விக்கும் ரிக்சனும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
இந்த விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்த கல்லூரி மாணவர்கள் தங்களது நண்பர்களின் உடல்களைப் பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதனர். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரித்விக் மற்றும் ரிக்சன் ஆகியோரின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், போலீஸ் விசாரணையில் உயிரிழந்த மாணவர்கள் இருவரும் ஹெல்மெட் அணியாமல் அதிவேகத்தில் சென்றது தெரியவந்துள்ளது. மேலும், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.