
திருவண்ணாமலை மணலூர் பேட்டை சாலையில் வசிப்பவர்கள் 14 வயதான லோகேஷ், 16 வயதான தனுஷ் குமார். எளிய குடும்பத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் தங்களது நண்பனின் பிறந்த நாளை முன்னிட்டு மணலூர் பேட்டை சாலையில் பல இடங்களில் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைத்துள்ளார்கள். அப்படி பேனர் வைக்கும்போது, மின்சார டிரான்ஸ்பார்மர் அருகே பேனர் வைத்தபோது, அந்த பேனரின் இரும்பு கம்பிகள் மின்சார வயரில் பட்டு மின்சாரம் பாய்ந்து லோகேஷ், தனுஷ்குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினார்கள். இந்த தகவல் தெரிந்து திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, நெடுஞ்சாலைகளில் பேனர் வைக்கவேண்டும் என்றால் சம்மந்தபட்ட நகர நிர்வாகம், காவல்துறை போன்றவற்றிடம் அனுமதி பெறவேண்டும், அனுமதி வழங்கப்பட்ட கடிதத்தை அந்த பேனரில் ஒட்டவேண்டும், அந்த பேனரும் 3 நாட்களுக்கு மேல் வைக்கக்கூடாது என்பது விதி. இந்த விதியை இப்போது பேனர் பிரிண்ட் செய்பவர்கள், வைப்பவர்கள் யாரும் கண்டுகொள்வதில்லை, முக்கியமாக அரசியல் கட்சியினர். அவரவர் விரும்பிய இடத்தில் பேனர் வைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர், இதனால் பலப்பல பிரச்சனைகள் உருவாகின்றன. பல விபத்துகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. சில உயிர்களும் பலியாகியுள்ளன.
திருவண்ணாமலை மாநகராட்சியில் அண்ணாமலையார் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் எந்தவித பேனரும் வைக்கக் கூடாது என மாநகராட்சியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது அறிவிக்கவும் செய்யப்பட்டது. அதன்படி தனியார் விளம்பர பேனர்கள் எதுவும் மாடவீதியில் வைப்பதில்லை அதே நேரத்தில் சில அரசியல் புள்ளிகள் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் பிறந்தநாள் விழா, திருமண விழா, சாதி சங்க விழாக்களுக்கு மாடவீதிகளில் பேனர் வைக்கின்றனர். இதனை தடுக்க வேண்டிய காவல்துறை கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றனர், நடவடிக்கை எடுக்கவேண்டிய மாநகராட்சி நிர்வாகம், போக்குவரத்து காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை எதுவும் கண்டுகொள்வதில்லை.
அதிலும் 80 சதவீத பேனர்கள் மாநகராட்சியில், காவல்துறையில் அனுமதி பெறாமலே வைக்கின்றனர். மின்கம்பம், டிரான்ஸ்பார்மர்களின் அருகே பேனர் வைத்தால் மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்கலாம், அதனையும் அவர்கள் செய்வதில்லை. திருவண்ணாமலை மாநகர பகுதிகளில் பல இடங்களில் குறிப்பாக செங்கம் சாலை பாலசுப்பிரமணி திரையரங்கு எதிரே, பழைய அரசு மருத்துவமனை அருகே, மத்திய பேருந்து நிலையம் அருகில், அறிவொளி பூங்கா அருகில், பழைய பைபாஸ் சாலை போன்ற இடங்களில் மின்கம்பத்திலும், டிரான்ஸ்பார்மர் அருகிலும் பேனர் தொடர்ச்சியாக பலதரப்பினரும் வைக்கிறார்கள். அதனைப்பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கண்டுக்கொள்ளாததன் விளைவே இரண்டு சிறுவர்கள் மரணத்தை தழுவியுள்ளனர்.அது தொடராமல் தடுக்கவேண்டும் என்றால் இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.