
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ளது நொளம்பூர். இந்த ஊரிலிருந்து கட்டளை செல்லும் சாலையில் (சென்னை) சின்னமலை பகுதியைச் சேர்ந்த அருள் என்பவருக்குச் சொந்தமான நிலத்துடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இவர் வாரம் ஒரு முறை சென்னையிலிருந்து பண்ணைக்கு வந்து தங்கிச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் அந்தப் பண்ணை வீட்டுக்குள் நுழைந்து கதவுகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பண்ணை முதலாளி அருள், ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பத்தில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வந்தனர்.
போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் பண்ணை வீட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் விழுப்புரம் மின்வாரிய அலுவலக சாலை பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் மகன் பாலமணி, தாம்பரம் திரு.வி.க. நகரைச் சேர்ந்த ரமேஷ் குமார் மகன் ஜெயந்தி நாதர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஒலக்கூர் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.