Skip to main content

அரசு வேலை வாங்கி தருவதாக மாற்றுத்திறனாளிகளிடம் 15 லட்சம் மோசடி செய்த இருவர் கைது! 

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

Two arrested for swindling Rs 15 lakh for government job

 

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், அழிச்சிக்குடி பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மனைவி மணிமொழி (32) என்கிற மாற்றுத்திறனாளி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த மனுவில், தான் எட்டாம் வகுப்பு படித்துள்ளதாகவும், தனக்கு சத்துணவு சமையல் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி தனது கணவருக்கு அறிமுகமான சிதம்பரத்தை அடுத்த மதுராந்தகநல்லூரைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் மாற்றுத்திறனாளி சரவணனும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றிவந்த வரக்கால்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அருள் மகன் பரந்தாமன் என்கிற பிரபுவும் இணைந்து ரூபாய் 2.50 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிவருவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறும் தெரிவித்திருந்தார். 

 

மனுவைப் பெற்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், இதுபற்றி விசாரிக்க மாவட்டக் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சுதாகர் மேற்பார்வையில் விசாரணை மேற்கொண்டனர்.  

 

Two arrested for swindling Rs 15 lakh for government job

 

விசாரணையில் மதுராந்தகநல்லூர் சரவணன் (33), வரக்கால்பட்டு பிரபு (35) இருவரும் ஏற்கனவே அரசு வேலை வாங்கித் தருவதாக பலரை ஏமாற்றி, அது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. அதன்படி சிதம்பரம் கொளஞ்சியப்பன் என்பவரின் மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக 3.50 லட்சம், விருத்தாச்சலம் அய்யாசாமி என்பவரிடம் 3.20 லட்சம், முருகன் என்பவரிடம் 5.10 லட்சம், மேலும் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனம் வாங்கி தருவதாக கூறி சிதம்பரம் முத்துக்குமாரசாமியிடம் 12,000, முத்துலட்சுமி என்பவரிடம் 12,000, பண்ருட்டி புவனேஸ்வரியிடம் 20,000, ஸ்ரீமுஷ்ணம் மைதிலி என்பவரிடம் 60,000 என மொத்தம் 15 லட்சத்து 34 ஆயிரம் பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமலும், மூன்றுசக்கர வாகனம் வாங்கித் தராமலும் ஏமாற்றிவந்தது தெரியவந்தது.

 

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். அதேசமயம் இதேபோன்று வேலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக யாரிடமாவது பணம் கொடுத்து ஏமாந்திருந்தால் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்