சொத்துப் பிரச்சனைக்காக நடந்த தகராறில் தனது உடன் பிறந்த தம்பியையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தலைமறைவாகியுள்ளார் விஜய் மக்கள் மன்றத் தலைவர்.
தூத்துக்குடி சின்னக்கடைத் தெருவை சேர்ந்தவர் பில்லா ஜெகன். இவர் விஜய் மக்கள் மன்றத் தலைவராகவும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராகவும் இருந்து வருகின்றார். சகோதரர்களுடன் உடன் பிறந்த இவருக்கு, இளைய சகோதரர் ஒருவர் விபத்தில் இறக்க கிளிவிங்சன், சுமன் மற்றும் கொலையுண்ட சிம்சன் உள்ளிட்ட சகோதரர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகையின் பொழுது பில்லா ஜெகனுடன், சகோதரர்கள் சுமன் மற்றும் கொலையுண்ட சிம்சன் ஆகியோர் சொத்துக்கள் கேட்டு தகராறு செய்துள்ளனர். அன்றைய தினத்தில் பில்லா ஜெகனின் தாயார் புளியம்பட்டி கோவிலுக்கும், கொலையுண்ட சிம்சனின் மனைவி பிரணித்தா மணப்பாடு கோவிலுக்கும் வழிபாட்டிற்காக சென்றுள்ளனர்.
இந்நிலையில், பில்லா ஜெகன் தனக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேச தன்னுடைய நண்பன் "தம்" மணிகண்டனையும், கொலையுண்ட சிம்சனோ தன்னுடைய ஆதரவிற்காக புதியம்புத்தூரை சேர்ந்த மாரீஸ் மற்றும் நாராயணனையும் அழைக்க மீண்டும் சொத்துப் பிரிவினைக்காக பேச்சு வார்த்தை பில்லா ஜெகனின் வீட்டின் மாடியில் திங்கட்கிழமை பின்னிரவில் நடைப்பெற்றுள்ளது.
மிகுந்த குடிபோதையில் இருதரப்பும் பேச்சு வார்த்தை நடத்த வார்த்தைகள் தடித்துள்ளதாகவும், அப்பொழுது பில்லா ஜெகன் தன்னிடமிருந்த 9 மி.மீ. கள்ளத்துப்பாக்கியினைக் கொண்டு சிம்சனை சுட்டிருக்கின்றார்.
அது சிம்சனின் தொடையில் பாய்ந்து அதிகளவு ரத்தத்தினை வெளிப்படுத்த, பஞ்சாயத்து பேச வந்தவர்கள் சிம்சனை தூக்கிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். ரத்தம் அதிகளவில் வெளியேறிவிட்டதால் இறந்துவிட்டதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. அதே வேளையில் தனது தம்பியையே கொலை செய்த பில்லா ஜெகன் தலைமறைவாகியுள்ளார் என்கின்றது காவல்துறை வட்டாரங்கள்.
பின்னிரவில் நடைப்பெற்ற சம்பவத்தால் தூத்துக்குடி பரப்பரப்பு அடைந்துள்ளது.