பொங்கல் திருவிழாவையொட்டி, திருச்சி மாவட்டம், பெரிய சூரியூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (15/01/2022) துவங்கியது. இப்போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
போட்டி துவங்குவதற்குமுன் வீரர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் முன் உறுதி மொழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 400 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மாடுபிடி வீரர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி சான்று, கோவிட் நெகட்டிவ் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு காளையுடன் உரிமையாளர், உதவியாளர் என இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காளையின் உரிமையாளர், உதவியாளர் இருவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி, கரோனா நெகட்டிவ் சான்று அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க இருக்கும் காளைகளுக்கு மருத்துவக் குழுவினர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப்போட்டியில் பங்கேற்ற ஒருவர் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (29) எனும் நபர், காளை முட்டியதில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் இருந்த மருத்துவ முகாம் மருத்துவக்குழுவினர் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவர்,சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். மீனாட்சி சுந்தரம், தான் வளர்த்த காளை முட்டியே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.