Skip to main content

வாகன ஓட்டிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
Trichy District Collector important instruction for motorists

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்கும், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 38வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகிறார். இதன் காரணமாக திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், வெளிப்பகுதியில் மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் முதல் குழு கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருச்சி வந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு முதல் திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் வருகையின் போது, 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பிரதமர் மோடி திருச்சி வருகையின் போது திருச்சியில் 33,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சொல்லப்படுகிறது.

விமான நிலையத் திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி நாளை மறுநாள் (02.01.2024) அன்று திருச்சிக்கு வருகை தருவதையொட்டி திருச்சியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவிக்கையில், “நாளை இரவு (01.01.2024) இரவு 08:00 மணி முதல் விமான நிலையம் வழியாக கனரக வாகனங்கள் புதுக்கோட்டைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Trichy District Collector important instruction for motorists

அதே சமயம் விமான நிலையம் வழியாக புதுக்கோட்டை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் ஜி-கார்னர், டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலம், மன்னார்புரம் மேம்பாலம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்ல அறிவுறுத்தப்படுகிறது. பிரதமர் வருகையையொட்டி பாஜகவினரின் வாகனங்கள் ஜனவரி 2 ஆம் தேதி காலை 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். நாளை மறுநாள் (02.01.2024) காலை 07:00 மணி முதல் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் வழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழியாக செல்லும் கட்சியினரின் வாகனங்கள் கும்பக்குடி வழியாக செல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்