Skip to main content

பள்ளியில் சேர்ந்த பழங்குடி மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து வரவேற்பு

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

nn

 

சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பில் அப்பகுதியில் உள்ள இருளர் பழங்குடியின மாணவர்கள் 23 பேர் கல்வி கற்க புதிதாக இணைந்துள்ளனர்.

 

கிள்ளை பேரூராட்சி மன்ற துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் அவர்களுக்கு மாலை, தலையில் கிரீடம் அணிவிக்கப்பட்டு ஒரு வண்டியில் அமர வைத்து ஒலிபெருக்கி மூலம் கல்வி குறித்தும், கல்வி கற்றால் என்ன நன்மை கிடைக்கும் எனவும் இருளர் பழங்குடியின சமூக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதனைத் தொடர்ந்து புதியதாகக் கல்வி கற்க வந்த அனைத்து மாணவர்களையும் வரவேற்கும் விதமாக கை தட்டி வாழ்த்து கூறி வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் குமரவேல், பரங்கிப்பேட்டை வட்டார கல்வி அலுவலர்கள் ராஜசேகர், கந்தசாமி, பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா, பள்ளியின் கல்விக் குழுத் தலைவர் சூர்யா, கிராம தலைவர் செஞ்சி சின்னமணி, சத்தியமூர்த்தி, செல்லதுரை, கோதண்டபாணி மற்றும் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொதுத்தேர்வு தொடங்கும் முன்னரே மாவட்டக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
District Education Officer suspended before public examination

2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர்.

மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

திட்டமிட்டபடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே கல்வித்துறையில் இருக்கக்கூடிய அலுவலர்களுக்கு ஆயத்தப் பணிகளுக்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்வு செயல்பாடுகளில் சுணக்கமிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவை சஸ்பெண்ட் செய்து இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முறையான பொதுத்தேர்வு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யாமல் சுணக்கம் காட்டியதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பே மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Next Story

“விளக்குமாறு விளங்கிய கையில் செங்கோல்” - வைரமுத்து

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
vairamuthu about sripathy

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி. ஏழ்மை குடும்பப் பின்னணியில் வளர்ந்த ஸ்ரீபதி கல்வியின் முக்கியத்துவம் கருதி வறுமையிலும் போராடிக் கல்வி கற்று பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்தார். சட்டப்படிப்பு படிக்கும் போது ஸ்ரீபதிக்கு திருமணமான நிலையில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. இந்தச் சமயம் ஸ்ரீபதி  கருவுற்ற நிலையில் தேர்வு தேதியும், பிரசவ தேதியும் ஒரே நாளில் வந்துள்ளது. 

ஆனால் ஸ்ரீபதிக்கு தேர்வுக்கு ஒரு நாள் முன்பே பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் பிரசவமான இரண்டாவது நாளே தன்னுடைய கணவர் உதவியுடன் சென்னைக்கு காரில் வந்து சிவில் நீதிபதி தேர்வை எழுதினார். அதில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார். 

இந்த நிலையில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் எக்ஸ் தளத்தில் ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜி.வி பிரகாஷ், “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு, மாடல்ல மற்றை யவை” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் அசோக் செல்வன், “தமிழகத்தின் முதல் பழங்குடியினப் பெண் நீதிபதி. மிக்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்” என பதிவிட்டுருந்தார். 

இதனை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து, 

“இரும்பைப் பொன்செய்யும்
இருட்கணம் எரிக்கும்

சனாதன பேதம்
சமன் செய்யும்

ஆதி அவமானம் அழிக்கும்

விலங்குகட்குச் சிறகுதரும்

அடிமைப் பெண்ணை
அரசியாக்கும்

விளக்குமாறு விளங்கிய கையில்
செங்கோல் வழங்கும் 

கல்வியால் நேரும்
இவையென்று காட்டிய
பழங்குடிப் பவளமே ஸ்ரீபதி

உன் முறுக்கிய முயற்சியில்
இருக்கிற சமூகம்
பாடம் கற்கட்டும்

வளர்பிறை வாழ்த்து” என குறிப்பிட்டுள்ளார்.