புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள கல்லாலங்குடி கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு நூறு நாள் வேலை நடந்து கொண்டிருந்த போது, ஒரு பெண் மண் வெட்டிய இடத்திலிருந்து தாலிக் கயிற்றில் அணியும் மணிகள் மற்றும் காசுகள் கொத்தாகக் கிடைத்துள்ளது.
கண்டெடுக்கப்பட்ட மணி, காசுகளை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர் கண்டெடுத்த பெண்கள். அந்த காசுகளில் 22 கேரட் கோல்டு 1996 என்று அச்சிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆபரணங்களை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகியிடம் ஒப்படைத்தனர். மொத்த ஆபரணங்களின் எடை 80 கிராம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தங்க நகைகளா அல்லது தங்க முலாம் பூசப்பட்ட ஆபரணங்களா என்றும் எந்த காலத்தைச் சேர்ந்தது என்பதை கண்டறியவும், புதுக்கோட்டை அருங்காட்சியக காப்பாட்சியரிடம் அனுப்பி வைக்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆலங்குடி பகுதியில் தாலியுடன், இது போல நிறைய மணிகள், காசுகளையும் சேர்த்து அணியும் கலாச்சாரம் இருப்பதால் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு யாரோ அணிந்திருந்த இந்த ஆபரணம் காணாமல் போய் இருக்கலாம் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.