தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட கவுன்சிலர்களுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக்கொண்டு சேர்மன், துணை சேர்மனை தேர்வு செய்துள்ளனர். ஒவ்வொரு ஒன்றியத்திலும் சேர்மன், துணை சேர்மன்கள் இணைந்து பணிகளை தொடங்கியுள்ளனர்.
அதேபோல் கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவியேற்றுக்கொண்டனர், துணை தலைவர் தேர்தலும் முடிந்து அவர்களும் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். பதவி ஏற்றுக்கொண்டு பலயிடங்களில் பணியை தொடங்கிய நிலையில் பெரும்பாலான இடங்களில் தலைவர்கள் தங்களது பணியை மேற்க்கொள்ளவில்லை. அதற்கு காரணம், புதியதாக தேர்வானர்கள் பலர் புதியவர்கள் மற்றும் பெண்கள்.

அதனால் வெற்றி பெற்று பதவிக்கு வந்துள்ளவர்களுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பினை ஊரக வளர்ச்சித்துறை ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஒன்றியமாக அழைத்து தலைவர், துணைதலைவர்களுக்கு நிர்வாகம் எப்படி நடத்துவது என தமிழகம் முழுவதும் நடத்த உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான அறிமுகப் பயிற்சி 22.01.2020 முதல் 24.01.2020 வரை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 05.30 வரை நடைபெறுகிறது. திருவண்ணாமலை, செய்யார் என இரண்டு இடங்களில் நடைபெறுகிறது. தினமும் ஒரு ஒன்றியம் என அழைத்து அதிகாரிகள் விளக்கம் தருகின்றனர்.
இப்பயிற்சியில் ஊரகப் பகுதிகளின் முழுமையான வளர்ச்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு, திறமை வாய்ந்த தலைமையின் வாயிலாக ஊரகப் பகுதிகளின் மாற்றம், சிறந்த முறையில் ஊராட்சி நிர்வாகம் நடத்துதல், கிராமசபை, ஊராட்சி கூட்டங்கள் நடத்துதல், வேலைகளுக்கான அனுமதி பெறுதல், பணிகள் செயல்படுத்தும் முறை, செலவினம் மேற்கொள்ளும் முறை, பொது நிதி மேலாண்மை அமைப்பின் வாயிலாக மின்னணு பரிமாற்ற முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுதல், ஊராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கல், தெருவிளக்குகள், துப்புரவு மற்றும் சுகாதாரத்தினை பராமரித்தல், ஊராட்சிகளின் மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள் மற்றும் திட்டம் தயாரித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் ஆகிய பொருள்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

கிராமங்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் வழங்கல், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், தண்ணீரை சுத்தம் செய்ய குளோரினேற்றம் செய்தல் மற்றும் காலமுறைப்படி தூய்மை செய்தல், பயன்பாடற்ற கிணறுகள் மூடுதல், தூர்த்தல், எல்.இ.டி. விளக்குகள், பேரிடர் நிலை அவசரகாலங்கள், தொற்றுநோய் பரவும் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், ஊராட்சிகளின் மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், வீட்டு வசதி, தூய்மை பாரத இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் ஊரக வாழ்வாதார திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார் முக்கிய அதிகாரி ஒருவர்.