கடந்த 5-ஆம் தேதி 'புரெவி' புயல் காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பொழிந்து வந்த சமயத்தில், காஞ்சிபுரம் களக்காட்டூரில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிவந்த மாற்றுத் திறனாளி பெண்ணான சரண்யா, அலுவலகத்தில் கழிப்பிட வசதி இல்லாமல், சிரமப்பட்டு வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான், குரூப் தேர்வு மூலம், பணியில் சேர்ந்த சரண்யா, ஏற்கனவே அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லை என்பதால், தான் வேலைக்குப் போக விருப்பமில்லை எனவும் கூறிவந்துள்ளார். ஆனால், அரசாங்க வேலை என்பதால் போக வேண்டும் எனப் பெற்றோர்கள் கூறியதை அடுத்து வேலைக்குச் சென்றுவந்துள்ளார் சரண்யா.
தொடர்ந்து மழை பெய்துவந்த அந்தச் சமயத்தில், தவிர்க்க முடியாத சூழலில், அருகில் உள்ள (சரிவர பராமரிக்கப்படாத) கழிவறையைப் பயன்படுத்தச் சென்ற சரண்யா, அங்கு வெறும் ஓட்டை வைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த, செப்டிக் டேங் மீது தெரியாமல் காலை வைத்த நிலையில், கழிவுநீர்த் தொட்டியில் விழுந்தார். வெகுநேரம் ஆகியும் அவர் வராததால், ஊழியர்கள் சென்று பார்க்கையில், கழிவுநீர்த் தொட்டியில் அவரது காலணிகள் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்று, அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளனர்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்ட சரண்யா ஆட்டோ மூலமாக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அரசு அலுவகங்களில் கழிப்பறை வசதியிருக்கிறதா? இருந்தாலும் அவை முறையாகப் பராமரிக்கப்படுகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மாற்றுத் திறனாளி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பான புகார்கள் எழ, தற்பொழுது, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலைமைச் செயலாளருக்கு, 6 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்து, இது தொடர்பாக பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.