சீனாவில் உருவான கரோனா வைரஸ், தற்போது 170 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழகத்திற்கு மார்ச் 31 வரை வெளிமாநில வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கேரளா, கர்நாடாக, ஆந்திர மாநில எல்லைகள் மூடப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி நாளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், நாளை அரசு, தனியார் பேருந்துகள் ஓடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை பெட்ரோல் நிலையங்கள் குறைந்தளவு பணியாளர்களுடன் செயல்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத மற்றும் அத்தியாவசிய போக்குவரத்துக்கு மட்டும் குறைந்தளவு எரிபொருள் நாளை வழங்கப்படும் என்றும் காலை 7 மணி முன்பும் இரவு 9 மணிக்கு பிறகும் தேவையான எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.