தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை அணிவித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தீபாராதனை காட்டியும், கற்பூரம் ஏற்றியும் பூஜை செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவள்ளுவர் ஒரு இந்து. அதனால் இந்து முறைப்படி தான் அவரை வழிபாடு செய்ய வேண்டும். அதன்பேரிலே தான் இன்று எனது தலைமையில் கட்சியினர் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து ருத்திராட்சை மாலை அணிவித்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தோம். அதில் என்ன தவறு இருக்கிறது என்றார்.
திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையணிந்து ருத்திராட்சை மாலை அணிவித்து அர்ஜூன் சம்பத் வழிபாடு செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கும்பகோணம் உடையாளுர் அருகே இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தை வல்லம் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அர்ஜுன் சம்பத் தஞ்சை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.