இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (31.10.2024) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1ஆம் தேதி அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.
இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் டாஸ்மார்க் ஊழியர்களுக்குத் தீபாவளிக்கான போனஸ் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் செயல்படும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (30.10.2024) பிற்பகல் முதல் என அரைநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் நாளை பிற்பகல் முதல், வெள்ளிக் கிழமை, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வரும் நவம்பர் 3ஆம் தேதி வரை மொத்தம் நான்கரை நாட்களுக்குப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.