பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ஓசூர் வழியாக மினி லாரியில் கடத்தி வந்த 50 லட்சம் ரூபாய் குட்கா போதைப் பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பூனப்பள்ளி சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு மினி லாரி நீண்ட நேரமாக சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் இருந்த இருவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் இருவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த தர்மலிங்கம் மற்றும் மணிகண்டன் என்பது தெரியவந்தது.
வாகனத்தை சோதனையிட்டபோது அதிலிருந்து 8 டன் குட்கா போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. குட்கா பொருள்கள், லாரியில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்களின் சந்தை மதிப்பு 50 லட்சம் ரூபாய் ஆகும். இந்த கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.