திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி டூ திருப்பத்தூர் சாலை என்பது மிக முக்கியமானது. இந்தச் சாலை வழியாக, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மட்டும் அல்லாமல் ஊத்தங்கரை, சேலம், கோவை எனப் பல பகுதிகளுக்குச் செல்லலாம். இந்தச் சாலை ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் நகரத்திற்குள் செல்வதால், பகல் நேரங்களில் சரக்கு வாகனங்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ரூட் பேருந்துகள் மற்ற வாகனங்கள் செல்கின்றன.
இந்தச் சாலை பல ஆண்டுகளாகவே மிக மோசமான நிலையில் உள்ளது. இதுபற்றி வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் பொதுமக்கள் மனுக்கள் தந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தச் சாலை வழியாகத்தன் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவான அமைச்சர் கே.சி.வீரமணி தன் வீட்டுக்குச் செல்கிறார். அதேபோல் வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவான அமைச்சர் நிலோஃபர் கபிலும் இதே சாலை வழியாகத்தான் திருப்பத்தூர்க்குப் போய்வருகிறார்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் என்கிற மாவட்டம் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் நகரம், மாவட்டத் தலைநகராக அறிவிக்கப்பட்டு அலுவலங்கள் வந்தபின்பு, வாணியம்பாடி, ஆம்பூர் தாலுக்கா மக்கள் இந்தச் சாலை வழியாகத்தான் திருப்பத்தூர் செல்கின்றனர்.
ஏற்கனவே மோசமாக உள்ள இந்தச் சாலை, தற்போது மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு கை, கால்களில் காயங்களோடு செல்கின்றனர், வாகனங்களும் சேதமடைகின்றன. அப்போதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தச் சாலை குறித்து சமூக வளைத்தளங்களில் பொதுமக்கள் சார்பில் பதிவுகள் வந்தபடியுள்ளன.
இந்நிலையில் வாணியம்பாடி பகுதியில் இயங்கும் ஒரு தன்னார்வ இளைஞர்கள் அமைப்பு, தாங்களே முன்வந்து சாலைகளில் உள்ள குழிகளில் மண்களை நிரப்பி அதனைச் சமன்படுத்தியுள்ளனர். இது அச்சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது.