கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் 65 ஆடுகள் இடி தாக்கி ஒரே நேரத்தில் எரிந்து சாம்பலானதால் குடும்பத்தினர் சோகத்தில் முழுகியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது செல்லூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது சின்னையன். இவர் ஆடுகள் வளர்த்து பிள்ளைகள் படிப்பு, திருமணம் உற்றார் உறவினர்களுக்கான நல்லது கெட்டது செலவுகள் இப்படி தனது குடும்பத்தின் அனைத்து தேவைகளையும், செலவுகளையும் அந்த ஆடுகளைக்கொண்டு சமாளித்து வருகிறார்.
தினசரி ஆடுகளை காட்டுக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று வருவார், வழக்கம்போல் நேற்று முன்தினம் தனது 65 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற சின்னையன் மேய்ச்சல் முடிந்து ஓட்டி வந்து மாலை 6 மணி அளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆட்டுக் கொட்டகையில் 65 ஆடுகளையும் அடைத்துள்ளார்.
பின் அவர் இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு படுத்து தூங்கியுள்ளார். இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதில் திடீரென்று பலமான இடி சத்தம் கேட்க தூக்கத்திலிருந்து பதறி எழுந்த சின்னையன், வீட்டில் இருந்து எழுந்து ஓடிவந்து ஆட்டுக் கொட்டகையை பார்த்தார். அப்பொழுது ஆட்டுக் கொட்டகை முழுவதும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது.
அதில் அனைத்து ஆடுகளும் தீயில் கருகிப்போய் கிடந்தன. இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுதனர். தங்கள் வாழ்வாதாரமாக வளர்க்கப்பட்ட ஆடுகளை ஒரே நேரத்தில் இடி விழுந்து இறந்து போனது அந்த குடும்பத்தை பெரும் துன்பத்திலும் வறுமையிலும் ஆழ்த்தி உள்ளது.
இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதுபோன்று இயற்கை பேரிடரால் நஷ்டமடையும் குடும்பத்திற்கு அரசு, நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். தன் குடும்பத்தின் வாழ்வாதாரமே நாசமாகிவிட்டது இனி பிழைப்பதற்கு என்ன வழி என்று திசை தெரியாமல் தவிக்கிறார்கள் சின்னையன் குடும்பத்தினர்.