
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (22.04.2025) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை, இந்திய ராணுவப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது. மேலும், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது இந்திய ராணுவப் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தாக்குதல் நடத்திய ஒவ்வொரு பயங்கரவாதிகளும் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதனிடையே கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், ஜி.கிரிஷ், பி.ஜி.அஜித்குமார் மூன்று பேர் தங்களது குடும்பத்தாருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தனர். ஆனால், இவர்கள் திங்கட்கிழமை பஹல்காமில் தங்கியிருந்த நிலையில் மறுநாள் காலை 9.30 மணிக்கு பஹல்காமில் இருந்து புறப்பட்டு, ஸ்ரீநகருக்கு நண்பகல் 12 மணிக்கு வந்து சேர்ந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு சில மணி நேரத்துக்கு முன்பு இவர்கள் பஹல்காமில் இருந்து மூன்று நீதிபதிகளும் அவர்களின் குடும்பம் வெளியேறியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் நூலிழையில் தப்பியுள்ளனர்.