தமிழகத்தில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன், நாகை கடலோர சோதனைச்சாவடிகளில் போலீசாரின் கண்காணிப்பையும் பலப்படுத்தியுள்ளனர்.
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும், தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்ட மூன்று டி,எஸ்,பி தலைமையிலான 170 தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை காவலர்கள் மற்றும் 6 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 108 காவலர்கள் குவிக்கப்பட்டு, அங்குள்ள தனியார் மற்றும் பேராலய விடுதிகள், பேருந்துநிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் அன்னிய நபர்களின் நடவடிக்கைகள் குறித்து அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாகை மாவட்ட கடலோர எல்லையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் ஒரு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 15 போலீசார் இரவு, பகல் பாராமல் வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இம்மாதம் 29 ம் தேதி புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா துவங்கி நடைபெற உள்ளது. விழாவில் உலகம் முழுவதில் இருந்தும் லட்சோப லட்சம் மக்கள் வந்துபோவார்கள், மக்கள் அதிகம் கூடும் வேளாங்கண்ணியில் இலங்கை குண்டுவெடிப்பு போல தீவிரவாதிகள் சதித்திட்டம் நிகழ்த்த கூடும் என்பதால், அதிரடிப்படை காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் படகு மூலம் தமிழக கடலோரப் பகுதிகளில் வரக்கூடும் என்பதால் நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிவேக படகுகளில் சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.