திருவண்ணாமலை நகருக்கு அருகில் உள்ள அத்தியந்தல் பகுதியில் காங்கிரஸ் கட்சி நடத்திய விவசாயிகள் சங்கமம் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துக்கொண்டனர். விவசாயிகள் கூட்டம் என்பதால், ஒரு மாட்டு வண்டியில் மணிலா செடிகள் கொண்டு வந்து வைத்திருந்தனர். பலரும் விருப்பத்தோடு வந்து ஆளுக்கு நாலு செடி எடுத்து அதிலிருந்து மணிலாவை பறித்து சாப்பிட்டனர்.
பந்தலின் மற்றொரு புறம் வரிசையாக ட்ராக்டர்களை நிறுத்திவைத்திருந்தனர். கிராமங்களில் இருந்து விவசாய தொழிலாளர்களை வண்டிகளில் அழைத்து வந்திருந்தனர்.
மேடையில் தலைவர்கள் அமர 2 அடி இடைவெளி விட்டு நாற்காலிகள் போடப்பட்டுயிருந்தன. மேடையில் மட்டும் சுமார் 40க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். மேடையில் நிற்பதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை. இதுப்பற்றி காங்கிரஸ் கட்சியின் முன்னால்தலைவர் இளங்கோவன் பேசும்போது, மேடையில் இதற்கு முன்னால் நெருக்கடியிருக்கும், இடைவெளியில்லாமல் இருக்கும். இந்த நிகழ்வில் இடைவெளியோடு அமர்ந்துள்ளோம், அமைதியாகவும் உள்ளோம் என்றார்.
தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, காங்கிரஸ் கூட்டம் என்றாலே தொண்டர்களை விட, மேடையில் அதிகமாக இருப்பார்கள். இப்போது அதுயில்லை என்றார். சில வாரங்களுக்கு முன்பு மறைந்த கன்னியாகுமரி தொகுதி எம்.பியாக இருந்த காங்கிரஸ் வசந்தகுமாரின் மகன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். ஆனால் நிகழ்ச்சியில் பெயர் போடப்பட்டிருந்த பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் வரவில்லை.
தனது உடல் நலத்தில் கவனம் செலுத்தும் மாநில தலைவர் அழகிரி, மதிய நேரமானதால் பார்சல் செய்து கொண்டு வரப்பட்ட ஸ்நாக்ஸ்சை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மேடையிலேயே சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். அந்த தெம்பில் மதியம் 1.15க்கு மைக் பிடித்தவர் 2.25 வரை பேசினார். மேடையில் இருந்த மற்ற தலைவர்கள், தொண்டர்கள் தான் நொந்துப்போயினர்.