திருச்சி மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்களை கூர்ந்து கவனிக்கும் காவல்துறை ஆணையர் அருண் கடந்த சில மாதங்களில் திருச்சி மாநகரில் காணாமல் போன மொத்த 39 இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கை தனிப்படை அமைத்து தீர விசாரித்து குற்றவாளியை பிடித்துள்ளார். திருச்சி மாநகரில் இதுவரை நடைபெற்ற இரு சக்கர வாகன திருட்டில் தொடர்புடைய அவரை மாநகர காவல்துறை ஆணையர் இன் தனிப்படை கடந்த 3 மாதகாலமாக கண்காணித்து இன்று கைது செய்துள்ளது.
மேலும் அவரிடம் இருந்து 39 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாநகரில் பொது இடங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் அவ்வப்போது காணாமல் போன நிலையில், உறையூர், தில்லைநகர், கன்டோண்மென்ட், கோட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண், கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது.
தனிப்படை திருச்சி கோட்டை தேவதானம் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்போது தப்பிச் செல்ல முயன்ற அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள புங்கனூர் காந்தி நகரை சேர்ந்த கிரிநாதன் (வயது 44) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடிக் கொண்டு வந்தது என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மாநகர் மற்றும் புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பைக்குகளை திருடியது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் மாவட்டம் முழுவதும் 26 மோட்டார் சைக்கிள்கள், 13 மொபட்டுகள் உட்பட 39 வாகனங்கள் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து 39 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இந்த வாகனங்களை கள்ளச்சாவி பயன்படுத்தியும், ஆன்பாரை சட்டென்று திருப்பி லாக்கை உடைத்தும் திருடி உள்ளனர். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என கிரிநாதனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிள்களை அதன் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேரில் வரவழைத்து வாகனங்களை அடையாளம் காட்ட செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதே போல கோட்டை போலீசார் ஒரே நேரத்தில் 70-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்யப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் பணி இன்று நடைபெற்றது.