திருச்சி, ஸ்ரீரங்கம் அகில பாரத பிராமணர் சங்கத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், அச்சங்கத்தின் துணைத் தலைவரான ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் பேசுகையில், “தமிழகம் முழுவதும் பல இடங்களில் தொடர்ந்து கால்நடைகள் துன்புறுத்தப்பட்டுவருகிறது. அதனைத் தடுக்க, சட்டங்கள் இருந்தாலும் பல இடங்களில் அந்தச் சட்டங்கள் மதிக்கப்படுவதோ பின்பற்றப்படுவதோ இல்லை.
தமிழகத்தில் கால்நடைகளை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற சட்ட விதிமுறைகள் உள்ளது. இந்நிலையில், கால்நடைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் போது மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லவேண்டும் என்று நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவைப் பின்பற்றாமல் பாதுகாப்பற்ற முறையில் கால்நடைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்படுமேயானால், அந்த வாகனம் எங்களுடைய பசு பாதுகாப்புப் படை குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "சாலைகளில் ஆங்காங்கே வழிகளை மறித்துக் கொண்டு இருக்கும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை உரியமுறையில் மீட்டு அதனைப் பாதுகாத்திட வேண்டும். சாலைகளில் சுற்றித் திரியக்கூடிய, இந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகளை எங்களுடைய பசு பாதுகாப்புப் படை குழு எடுக்கும்” என்றும் தெரிவித்தார்.