தமிழகத்தில் நேர்மறையான அரசியல் வர வேண்டும் இனி இங்கு எதிர்மறையான அரசியலுக்கு இடமில்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ராமர், சிலையுடன் ஒரு ரதம் கடந்த பல நாட்களாக நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு சென்று இன்று தமிழகத்துக்கு வருகிறது. இதில் எதிர்ப்பு தெரிவித்து கைதாகும் அளவுக்கு என்ன இருக்கிறது? நாடு முழுவதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக நடந்து வருகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? பிற மதத்துக்கு எதிரான கருத்துக்களையோ, ஒவ்வாத கருத்துக்களையோ தெரிவித்தால் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
யாத்திரையை ராமர் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் வரவேற்கட்டும். வணங்கட்டும். உங்களுக்கு விருப்பமில்லையா முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விட வேண்டியது தானே? ரதத்தையே அனுமதிக்க மாட்டோம் என்று சொல்ல என்ன உரிமை இருக்கிறது? இவர்கள் சொல்வதை பார்த்தால் தமிழகத்தில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களே இருக்க கூடாது. கடவுள் வழிபாட்டு செயல்களே நடைபெற கூடாது என்று திட்டமிட்டு செயல்படுவது போல் தெரிகிறது.
இந்து மதம் சார்ந்த எந்த நடவடிக்கையும் தமிழகத்தில் இருக்கக்கூடாது என்று கூறும் ஸ்டாலின் போன்றவர்களை இந்து மக்கள் அடையாளம் காண வேண்டும். உங்கள் நம்பிக்கையை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் எங்கள் நம்பிக்கையை நாங்கள் வைத்துக்கொள்கிறோம்.
மதம் சார்ந்த எந்த நடவடிக்கையும் இருக்கக் கூடாது என்று கூறுவது பெரும்பான்மையான மக்களின் மனதை புண்படுத்தும். இந்துக்கள் எப்போதும் அமைதியின் மீது நம்பிக்கை உள்ளவர்கள். ரத யாத்திரை அமைதியாக ராமேஸ்வரத்தில் நிறைவடைந்திருக்கும். தமிழகத்தில் நேர்மறையான அரசியல் வர வேண்டும் இனி இங்கு எதிர்மறையான அரசியலுக்கு இடமில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.