தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் பகுதியில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்திலிருந்து வந்தவர்களின் முழு விபரங்களடங்கிய பேனல்போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளிடமிருந்து வந்தது. அதனைச் சரிபார்த்து அந்த வீடுகளைத் தனிமைப்படுத்தும் நோட்டீஸ் ஒட்டும் பணியை சங்கரன்கோவில் நகராட்சித் துறையினர் மற்றும் காவல்துறையினரைக் கொண்ட தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.
நகரின் பல்வேறு பகுதிகளில் கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சங்கரன்கோவில் வந்துள்ளவர்கள் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை கண்காணிப்பில் உள்ளனர். குறிப்பாக ஸ்பெயின் நாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ள வடக்கு ரதவீதியை சேர்ந்த கணவன் மனைவி உட்பட 4 பேர்கள் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து நேற்று கேரளாவில் இருந்து சங்கரன்கோவில் புதுமனை 2ம் தெருவிற்கு வந்துள்ள நபரின் வீட்டில் நகராட்சி சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டினர். பின்னர் அந்த வீடு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் பாலசந்தர் கூறியதாவது, சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த 10 நபர்களும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 32 நபர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ அறிவுறுத்தப்பட்டது. அவர்களது வீடுகளில் ஒட்டப்பட்டது.
கேரளா மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்த சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். பொதுவாக நோய் தொற்று இருப்பது உடனே தெரியாது. எனவே வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு திரும்பியவர்களும் தாங்களாகவே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வது அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் நல்லது. நம் ஊருக்கும் நல்லது. பொது மக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நகராட்சி சுகாதாரதுறைக்கு உடனே தகவல் தெரிவிக்கலாம். ஏனெனில் மேலும் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.