தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் மொட்டனூத்து ஊராட்சி ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் - கவிதா தம்பதியினருக்கு பிறந்த ஆறு நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு எருக்கம்பால் ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் கவிதா தம்பதியர்களுக்கு கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சுரேஷ் கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர்களது பத்து வயதான முதல் மகள் பாண்டி மீனா 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகள் ஹரிணி 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஆண்டிபட்டி அருகே உள்ள ராமகிருஷ்ணா புரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கவிதா மூன்றாவது முறையாக கர்ப்பமாகி பிரசவத்திற்காக கடந்த 20-ந்தேதி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ம்தேதி கவிதாவுக்கு சுகப் பிரசவம் ஆகி பெண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டு நாட்கள் கழித்து தாயும், குழந்தையும் தங்கள் சொந்த வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2.3.2020 கவிதா கோழிக்கறி சாப்பிட்டதாகவும், நிலக்கடலை சாப்பிட்டதாகவும் அதனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது அதிகமாகி குழந்தை இறந்துவிட்டதாக கூறி குழந்தையை வீட்டுக்கு அருகே உள்ள இடத்தில் அடக்கம் செய்துள்ளனர்.
இது குறித்து ரகசிய தகவல் கிடைத்து மாவட்ட குழந்தை நலம் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் ஆண்டிபட்டி தாசில்தார் சந்திர சேகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தாசில்தார் சந்திரசேகர் மொட்டனூத்து கிராம நிர்வாக அலுவலர் தேவியிடம் இதுகுறித்து விசாரணை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் தேவி ராமநாதபுரத்திற்கு சென்று கவிதாவிடம் அவருடைய மாமியார் செல்லம்மாளிடமும் விசாரணை நடத்தி உள்ளார். விசாரணையின் போது இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் இதுகுறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் கவிதா மற்றும் அவருடைய மாமியார் செல்லம்மாள் ஆகியோரை ராஜதானி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஆண்டிபட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலகுரு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சாகுல் அகமது மற்றும் சவரிமம்மாள் தேவி ஆகியோர் முன்னிலையில் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கவிதா மற்றும் அவருடைய மாமியார் செல்லம்மாள் ஆகியோர் மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாது என்று கருதி எருக்கம் பால் ஊற்றி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.
அதன் அடிப்படையில் ஆண்டிபட்டி தாசில்தார் சந்திரசேகர் முன்னிலையில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதற்காக கவிதா அழைத்து வரப்பட்டார். கவிதா அடையாளம் காட்டிய இடத்தில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அரசு மருத்துவர் ராஜபாண்டியன் பிரேத பரிசோதனை மேற்கொண்டார். அதனையடுத்து பெண் சிசுக் கொலை செய்த தாயார் கவிதா மற்றும் மாமியார் செல்லம்மாள் ஆகியோரை ராஜதானி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இதே போல் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி அடுத்து இருக்கும் புள்ளநெரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் அவருடைய மனைவியும் சேர்ந்து பிறந்த பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யதனர். அதைதொடர்ந்து மற்றொரு சிசு கொலை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.