
திருச்சி, பாலக்கரை எடத்தெருவில் சகாய மாதா பசிலிக்கா எனும் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் பக்தர்கள் செலுத்துவதற்காக காணிக்கை உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியலை சிறுவன் ஒருவன் உடைத்து கொண்டிருப்பதாக தேவாலயத்தின் மேனேஜர் பெனடிக் தேவசகாய ராஜிக்கு பக்தர் ஒருவர் தகவல் அளித்துள்ளார்.
அதன்பேரில் மேனேஜர் வேகமாக தேவாலயத்திற்குள் வந்த பொழுது அங்கு உண்டியலை உடைத்து பணம் திருடி கொண்டு இருந்த சிறுவன் ஓட்டம் பிடித்துள்ளார். இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் ஆலயத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் பதிவாகி இருந்த சிறுவன் யார் என்பது குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது உண்டியல் திருட்டில் ஈடுபட்டது வரகனேரி மேட்டு தெருவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அச்சிறுவன் மீது வழக்கு பதிவு செய்த எஸ்.ஐ ஜான் பீட்டர் அவரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தார். உண்டியிலிருந்து திருடிய 2 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.